நாலாயிர திவ்விய பிரபந்தம் யுனிகோடில்

Monday, November 22, 2004

சீதக்கடல்

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
சீதக்கடல்
திருப்பாதாதிகேச வண்ணம்


முதல் திருமொழியை படித்திருப்பீர்கள். ஆழ்வாரின் தாய்மை உணர்வை நன்கு உணர்ந்திருப்பீர்கள். அடுத்த திருமொழியைப் பாருங்கள், பிள்ளைத்தமிழின் அடுத்தகட்டமாக குழந்தையின் அங்கங்களை வர்ணிக்கும் விதத்தைப் பார்ப்போம் இந்த இரண்டாம் திருமொழியில்

சீதக் கடலுள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர் வந்துகாணீரே

சீதக்கடல் - திருப்பாற்கடல், அமுதன்ன - அமுதத்தைப் போன்ற, கோதைக்குழலாள் - மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடையவள், போத்ததந்த - அவளுக்கென்று கொடுக்கப்பட்ட, பேதைக்குழவி - சின்னஞ்சிறு குழந்தை. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய அமுதத்தைப் போன்று காணப்படும் தேவகியிடமிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடைய யசோதைக்கு என்று அனுப்பபட்ட குழந்தைக் கண்ணன் தனது தாமரையையொத்த பாதங்களை சுவைக்கின்ற காட்சியைப் பார்க்கவாருங்கள். பவளத்தைப் போன்று சிவப்பான வாயுடையவர்களே வாருங்கள் வந்து குழந்தைக் கண்ணன் பாதத்தை சுவைக்கும் அழகைப் பாருங்கள்.

முத்தும்மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்துகாணீரே

இந்தப் பாடலை நாம் சற்றே மாற்றி

பத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள்
முத்தும்மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்எங்கும்
ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்துகாணீரே

தானாகவே புரிந்திருக்கும் மணிவண்ணனின் பத்துவிரலும் எப்படியிருந்தது தெரியுமா? முத்துக்கள், மணியும், வைரமும் நல்ல சுத்தமான தங்கத்தில் பதித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் அதுபோன்று கண்ணனின் பாதங்கள் ஒவ்வொன்றும் போட்டியிட்டுக் கொண்டிருந்தது. நல்ல ஒளிவீசக்கூடிய நெற்றியை உடையவர்களே வாருங்கள் வந்து கண்ணனின் பத்துவிரலும் போட்டியிடுவதைப் பாருங்கள்.............

பணைத்தோளிள வாய்ச்சிபால் பாய்ந்த கொங்கை
அணைத்தார உண்டுகிடந்தவிப் பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளைநின்றிலங்கும்
கனைக்காலிருந்தவா காணீரே காரிகையீர் வந்துகாணீரே

பனைத்தோளை போன்று மென்மையான தோள்களையுடைய ஆய்ச்சி யசோதையிடத்தில் பால் குடித்துக்கொண்டிருக்கும் கண்ணனின் கனுக்கால்களில் வெள்ளி தண்டையோடு இருக்கும் அழகைக் காணுங்கள் காரிகையர்களே வாருங்கள் வந்து குழந்தைக் கண்ணனின் கனுக்கால் அழகைக் காணுங்கள்.தொடர்ந்துக் காண்போம்................

3 comments:

ரங்கா - Ranga said...

தங்களுடைய வலைப்பதிவிற்கு இப்போது தான் வந்தேன். உங்கள் பாசுர விளக்கங்கள் அனைத்தையும் ஒரே மூச்சாய் படித்து முடித்துவிட்டென். பிரபந்தத்தின் மற்ற பாடல்களையும் தாங்கள் விளக்கினால் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

நன்றியுடன், ரங்கா.

aanmigakkadal said...

very useful to me.thanks a loot.
by
www.aanmigakkadal.blogspot.com

radhakrishna said...

மிக அற்புதமான படைப்பு. கிருஷ்ண பகவான் உங்களுக்கு எல்லா நலன்களும் தருவார்.