நாலாயிர திவ்விய பிரபந்தம் யுனிகோடில்

Saturday, November 06, 2004

திருப்பல்லாண்டு 8,9

பெரியாழ்வார் அருளிச்செய்த
திருப்பல்லாண்டு
முதற்பத்து

8
நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே.



நெய்யெடை நல்லதோர்சோறும் நியதமுமத்தாணிச் சேவகமும் - நெய்யெடை நெய்க்கு சரிநிகரான எடையுடன், நல்லதோர்சோறும் நெய்க்கு சரியான எடையில் நல்ல சோறும் கலந்து, நியதமுமத்தாணிச் சேவகமும், நியதமும் - நித்தமும், அத்தாணிச் சேவகமும் - எம்பெருமானுக்கு அருகிலேயே இருந்து சேவைச் செய்வதை... கையடைக்காயும் - அடைக்காய் என்றால் தாம்பூலம், கையடைக்காய் என்றால் கை முழுவதும் தாம்பூலத்தை வைத்துக்கொண்டு. இறைவனுக்கு சரிநிகர் நெய்யும் சாதமுங்கொடுத்து அவை முடிந்தவுடன் தாம்பூலத்தையும் கொடுத்து. உடன் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் - கழுத்துக்கு ஏற்ற அணிகலன்கள் (நகைகள்) காதுக்குக் குண்டலத்தையும் மாட்டி, மெய்யிட நல்லது ஓர் சந்தமும் - உடல் முழுவதும் நல்ல மணம் வீசும் சந்தனத்தைத்தடவி, என்னை வெள்ளுயிராக்க வல்ல பையுடை நாகப்பகைக் கொடியோனுக்கு....இவ்வாறெல்லாம் இறைவனுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் தூய உள்ளத்தோடு இருக்கச் செய்த, பையுடை என்றால் படம் எடுக்கக்கூடிய உடலினைக் கொண்ட என்றும் நாகப்பகைக் கொடியோன் என்றால் அவ்வாறு படையெடுக்கக்கூடிய நாகப்பாம்பினை பகையாகக் கொண்ட கருடனைக் கொடியாக்கொண்ட எம்பெருமானுக்கு பல்லாண்டு கூறுவோமே வாருங்கள்.............



9
உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.


எடுத்துக் களைந்த நின் பீதக வாடையுடுத்துக் கலத்ததுண்டு - உன்னுடைய ஆடையாம் பீதக ஆடை (பீதாம்பரம்) உனக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை களைந்தவடன் உனக்கு திருத்தொண்டு செய்யும் நாங்கள் மாற்றிக்கொள்வோம். எங்களுக்கென்று தனியாக ஆடை ஏதும் இல்லை உன்னுடைய ஆடையைத் தவிர, கலத்ததுண்டு என்றால் இறைவனுக்கு அமுது செய்யும் பாத்திரத்தில் இறைவனுக்கு அமுது செய்த பின்னர் இருக்கும் உணவினையே நாங்கள் உண்போம். தொடுத்ததுழாய் மலர்சூடிக் களைந்தன குடுமித் தொண்டர்களோம் - எம்பெருமானுக்கு சூடிக் களைந்த திருத்துழாய் மாலையை சூட்டிக் கொள்ளும் தொண்டர்களாம் எங்களை, விடுத்த திசைக்கருமந்திருத்தித் திருவோணத் திருவிழாவில் - எம்பெருமானே நீ விடுத்த ஆணைகள் எல்லாவற்றையும் எந்த திசையாயினும் அவற்றை செய்து முடித்து, திருவோணத்திருவிழாவில் அந்த இறைவனின் திருநட்சத்திரமான திருவோணத்தில், படுத்தபைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்கு... - படம் எடுத்த நாகனைப் பாயாகக் கொண்டு பள்ளிக்கொண்டிருக்கும் எம்பெருமானை பல்லாண்டு பல்லாண்டென்று கூறுவோமே.........

No comments: