நாலாயிர திவ்விய பிரபந்தம் யுனிகோடில்

Wednesday, November 03, 2004

திருப்பல்லாண்டு 1,2

நீண்ட நாளாகிவிட்டது பல அலுவல்கள் அதோடுமட்டுமல்லாமல் பலவித வலைப்பூக்களை ஆரம்பித்துவிட்டேன் அவற்றையும் பூர்த்தி செய்ய சிறிது நேரம் தேவைப்பட்டது. இனி தொடருவோம்.........


பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து

1. திருப்பல்லாண்டு

காப்பு

குறள்வெண்செந்துறை

1
பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு.



பல்லாண்டு பல்லாண்டு பல ஆயிரம் ஆண்டுகள் பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் எல்லாம் கால எல்லையற்ற, எப்பொழுதும் அருள் பாலித்துக்கொண்டிருக்கின்ற மணிவண்ணா, மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா, நீ அன்று கிருஷ்ணவதாரத்திலே உனது மாமன் கம்சனின் சதியாம் மல்லர்களை (மற்போர் புரிபவர்கள்) திண்மையான தோளுடைய நீ வெற்றிக் கண்டாய். உன் சேவடி செவ்வி திருக்காப்பு, உன்னுடைய சிவந்த கமல மலர் போன்ற பாதங்களுக்கு என்றென்றும் பல்லாயிரம் ஆண்டுகள் திருக்காப்பு தொடர்வதாகுக..... என்று பெரியாழ்வார் இந்த பாடலிலே ஆரம்பிக்கின்றார். வைணவர்கள் தங்களின் பூஜையின்போது கடைசியாக இந்த திருப்பல்லாண்டை கூறுவர்.


அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

2
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே.


அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றியாயிரம் பல்லாண்டு, உனது அடியார்களாகிய நாங்கள் உன்னுடனும் நீ எங்களுடனும் பிரிவென்பதே இல்லாமல் இருக்க உனக்கு நாங்கள் ஆயிரம் பல்லாண்டு கூறினோம். வடிவாய் நின்மலர் மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டே, அழகான உன்னுடைய மலர் போன்ற வலமார்பினிலே நித்தம் வீற்றிருக்கும் தாயாரும் பல்லாண்டே. வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு, அழகிய ஒளிவெள்ளமான உன் வலக்கையிலே வீற்றிருக்கும் சுடராழி (சக்கரத்தாழ்வார்)யும் பல்லாண்டே. படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே, அன்று பாரதப்போரிலே போரினை தொடங்க எடுத்துக்கொண்ட பாஞ்ச சன்னிய (சங்கு) மும் பல்லாண்டே. இங்கே எல்லாவற்றையும் பல்லாண்டே என்று கூறுவதன் அர்த்தம், பல்லாண்டு என்பது போற்றியாகவும், பல ஆயிரம் ஆண்டுகள் இருந்து எங்களுக்கு அருள் பாலிக்கவேண்டும் என்றும் அதற்காக நீ பல்லாண்டு இரும் என்று கூறுதாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது மக்களாகிய நாம் இறைவனை நினைக்காது அவனை போற்றாது பல அலுவல்களை செய்கிறோம் இதையெல்லாம் மறந்து வாருங்கள் எல்லோரும் பல்லாண்டு கூறுவோம் என்று அழைக்கிறார். வாருங்கள் பல்லாண்டு கூறுவோம்........மீண்டும் சந்திப்போம்.

3 comments:

Desikan said...

கோமான் பாலாஜி,

வாழ்த்துக்கள். நல்ல முயற்சி.
பகாவானையே வாழ்த்தியதால் அவருக்கு பெரியாழ்வார் என்ற பெயர் வந்தது.
பெரியாழ்வார் பற்றி சில குறிப்புகள் இங்கே காணலாம் http://www.employees.org/~desikan/s_azhvar006.htm
தொடருங்கள்.

தேசிகன்
desikann.blogspot.com

Koman Sri Balaji said...

நன்றி தேசிகன், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆழ்வார்களிலேயே இவர் ஒருவர் தான் பெருமாளையே வாழ்த்தியவர். பல்லாண்டிரும் என்று உரைத்தவர். தொடர்ந்து பக்கங்களை பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்........ கோமான் பாலாஜி

Unknown said...

Its really good.
Any body can understand.

Will be able to post Nithyanu Santhanam songs in this pl