நாலாயிர திவ்விய பிரபந்தம் யுனிகோடில்

Wednesday, October 27, 2004

இப்பொழுது நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தொகுத்த ஸ்ரீமந் நாதமுனிகள் பற்றிய ஒரு சுவையான கதையைப் பற்றிப் பார்ப்போம்.... இந்த திவ்விய பிரபந்தம் முழுவதும் ஆழ்வார்கள் பன்னிருவர் அருளிச்செய்தது என்று அனைவருக்கும் தெரியும். இந்த திவ்விய பிரபந்தம் ஆழ்வார்கள் காலத்திலிருந்து வாய்மொழியாக பல ஊர்களிலும் பல கோயில்களிலும் இசையுடன் பாடப்பட்டிருந்தது. ஒரு தடவை நாதமுனிகள் என்னும் ஆச்சாரியர் கும்பகோனத்திற்கு சென்று பெருமாள் சேவித்துக் கொண்டிருக்கும்பொழுது அங்கு வந்திருந்த வைஷ்ணவர்கள் சிலர் ஆராவமுதே அடியேனுடலம் என்னும் திருவாய்மொழியை நல்ல இசையோடு பாடினராம், மேலும் குழலில் மலியச்சென்ன ஓராயிரத்துளிப்பத்தும்.... என்றவுடன் நாதமுனிகளுக்கு ஓ... உங்களுக்கு ஓராயிரப் பாடலும் தெரியுமோ என்று கேட்டாராம். அதற்கு அவர்கள் எங்களுக்குத் தெரியாது நீங்கள் ஆழ்வார்திருநகரிச் சென்றால் அடையலாம் என்றனராம்...உடனே நாதமுனிகள் திருக்குருகூரெனும் ஆழ்வார்திருநகரிச் சென்று ஸ்ரீமதுரகவிகள் இயற்றிய கண்ணி நுண்சிறுத்தாம்பு என்னும் திவ்வியபிரபந்தத்தை ஆயிரம் தடவைக்கும் மேல் பாராயணம் செய்ய நம்மாழ்வார் அவர் முன் தோன்றி தாம் இயற்றிய திருவாய்மொழியையும் மற்ற ஆழ்வார்களியற்றிய மூவாயிரப் பாடலையும் தந்தருளினாராம். இப்படித்தான் ஸ்ரீமந் நாதமுனிகள் நாலாயிர திவ்விய பிரபந்தப் பாடல்களை பெற்று பின்னர் அவற்றை தொகுத்தாராம், இப்படியாக குருபரம்பரை நூல்கள் தெரிவிக்கின்றன. இந்த நாலாயிரதிவ்வியபிரபந்தம் தமிழ்வேதம் என்றும் திராவிட வேதம் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆழ்வாரும் அவர்கள் அருளிச்செய்தவைகள் பற்றியும் பார்ப்போம்....
1. பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
2. பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
3. போயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
4. திருமழிசையாழ்வார் திருச்சந்தவிருத்தம்
நான்முகன் திருவந்தாதி
5. மதுரகவியாழ்வார் கண்ணி நுண்சிறுத்தாம்பு
6. நம்மாழ்வார் திருவிருத்தம்
திருவாசிரியம்
பெரிய திருவந்தாதி
திருவாய்மொழி
7. குலசேராழ்வார் பெருமாள் திருமொழி
8. பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
9. ஆண்டாள் திருப்பாவை
நாச்சியார் திருமொழி
10. தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை
திருப்பள்ளியெழுச்சி
11. திருப்பாணாழ்வார் அமலணாதிபிரான்
12. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருக்குறுந்தாண்டகம்
திருவெழுகூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திருமடல்

இதில் நம்மாழ்வாரியற்றிய திருவிருத்தம் ரிக் வேத சாரமாகவும், திருவாசிரியத்தை யஜூர் வேதச்சாரமாகவும், பெரிய திருவந்தாதியை அதர்வண வேதச்சாரமாகவும், திருவாய்மொழியை சாம வேதச்சாரமாகவும் கூறுவர். திருமங்கையாழ்வாரியற்றிய இரண்டு திருமடலும், எழுகூற்றிருக்கையும் தமிழில் இதுபோல் ஒரு படைப்பே இல்லை எனக்கூறும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தது. இனி வரும் பகுதிகளில் பாடல்களின் மூலமும் முடிந்த அளவுக்கு அவற்றின் அர்த்தமோ அல்லது அந்தப் பாடலின் சிறப்போ உடனிருக்கும். தொடர்ந்து பாருங்கள் வாழ்த்துக்கள்......

3 comments:

அன்பு said...

நாலாயிர திவ்வியபிரபந்தம் அழகானதமிழில் இருக்கிறது என்பதைத்தவிர வேறொன்றுமறியேன்... உங்கள் மூலம் கற்றுக்கொள்கிறேன். தொடருங்கள் வாழ்த்துக்கள்.

(இதுதொடர்பில் நண்பர் ஒருவர் எப்போதும் சிலாகித்து கூறுவார், அவரையும் வலைப்பதிவுப்பக்கம் இழுக்க மிகுந்த சிரமப்பட்டுக்கொண்டிருந்தேன் - இந்த உங்களின் பதிவு என்னுடைய பணியை கொஞ்சம் எளிமையாக்கும் என்று நினைக்கிறேன், பார்க்கலாம் அரங்கன் என்ன நினைக்கிறாரென்று:)

Kasi Arumugam said...

கோமான் பாலாஜி,

வணக்கம், நல்ல பணி. வாழ்த்துக்கள்.

டாக்டர் கண்ணன் 'பாசுரமடல்' என்ற தலைப்பில் கிட்டத்தட்ட வலைப்பதிவைப் போலவே வரிசையாக எழுதியிருக்கும் தொடர்கட்டுரைகளையும் பாருங்கள் (திஸ்கியில்):
http://www.angelfire.com/ak/nkannan/Madals/madalindex.html

அவரின் சில புதிய கட்டுரைகள் (யுனிகோடில்)
http://alwar.log.ag/

தொடர்ந்து எழுதுங்கள்,
-காசி

Anonymous said...

vanackam.
prabandhathai muckanium thenum thoithu valail tharum unkalucku vazhvil sickaledhuminri seeralwar sirappu seivar.

srimariselvam